பணம் என்பது ஒருவித பலம்!

பணம் என்பது ஒருவித பலம்!

– தோழி

‘‘வேலைக்குப் போற பெண்கள்ல 80 சதவிகிதம் பேர் முதலீடுங்கிற விஷயத்துல முடிவெடுக்கிறதில்லை. ரொம்ப சிலர்தான் தங்களோட வருமானத்துல ஒரு பகுதியை முதலீடு செய்யறதா சொல்லுது சமீபத்திய நீல்சன் ஆய்வு முடிவு. ‘ரிஸ்க் எடுக்கத் தயாரா இல்லை… நிதி நிர்வாகத்தைப் பத்தி எதுவும் தெரியாது… அந்தளவுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை… நம்பிக்கை இல்லை…’ – இப்படி அந்த 80 சதவிகிதப் பெண்கள் சொல்லியிருக்கிற காரணங்கள் அதிர்ச்சியளிக்குது. பணத்தால சந்தோஷத்தை விலை கொடுத்து வாங்கிட முடியாதுதான். ஆனா, பணம் என்பது ஒருவித பலம். கையில பணம் இருந்தா அது உங்களை தைரியமானவங்களா மாத்தும்கிறதுல சந்தேகமே இல்லை.

பணத்தைப் புரிஞ்சுக்கிறவங்களுக்குத்தான் அதோட மகத்துவம் தெரியும்…’’ என்கிறார் ரேணு மகேஸ்வரி. நிதி ஆலோசகரான இவருக்கு நிதி நிர்வாகத் துறையில் ஏறக்குறைய 20 ஆண்டு அனுபவங்கள் உண்டு. தனது ‘ஃபின்ஸ்காலர்’ என்கிற நிறுவனத்தின் மூலம்  WOW (Women Only Workshop) என்கிற பெயரில், பெண்களுக்கும் நிதி முதலீட்டுத் துறைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புகிற ஒர்க்ஷாப்புகளை அடிக்கடி  நடத்துகிற ரேணு, SEBIன் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரும் கூட.

‘‘எனக்கு இயல்பிலேயே எண்கள்னா ரொம்பப் பிடிக்கும். எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் படிச்சேன். கார்ப்பரேட் ஃபைனான்ஸ்ல 6 வருஷம் வேலை பார்த்தேன். கல்யாணம், குழந்தைகள்னு வந்ததும் ஒரு சின்ன பிரேக். கடமைகளை முடிச்சிட்டு மறுபடி எனக்குப் பரிச்சயமான அதே ஃபைனான்ஸ் துறையில தொடரணும்னு நினைச்சேன். அப்ப எனக்கு பர்சனல் ஃபைனான்ஸ் துறை அதிக சவாலானதா, சுவாரஸ்யமானதா தெரிஞ்சது. 2 வருஷங்களுக்கு முன்னாடி ‘ஃபின்ஸ்காலர்’னு என்னோட சொந்த நிறுவனத்தை ஆரம்பிச்சேன்.

பெண்களுக்கும் நிதி நிர்வாகத்துக்கும் இடையில ஒரு பெரிய இடைவெளி இருக்கு. இதை வி வடிவ கிராஃபா பார்க்கறேன். காலேஜ் படிக்கிறப்பவும் வேலையில சேர்ந்த புதுசுலயும் சம்பாதிக்கணும், லட்சியங்களை அடையணும்னு ஒரு துடிப்பு இருக்கும். அப்போ கீழிருந்து மேல அவங்களோட கிராஃப் உயரும். கல்யாணமாகி, குழந்தை பிறந்ததும் அனேகப் பெண்களுக்கு ஒரு சறுக்கல்… அதுலேருந்து மீண்டு மறுபடி போராடி விட்ட இடத்தைப் பிடிக்க அவங்க பயங்கர ஹார்ட் ஒர்க் பண்ணினாதான் சரிஞ்சு விழுந்த கோடு மறுபடி மேலே ஏறும். வயசான பிறகு மீண்டும் அது கீழே இறங்கலாம்…’’ – வி வடிவ கிராஃபுக்கு ரேணு தருகிற விளக்கம் சுவாரஸ்யம்!

‘‘என்னோட ஃபின்ஸ்காலர் அமைப்பு மூலமா கார்ப்பரேட் நிறுவனங்கள்ல வேலை பார்க்கிற பெண்களுக்கான ஒரு நாள் ஒர்க்ஷாப் நடத்தறேன். இந்த ‘வுமன் ஒன்லி ஒர்க்ஷாப்’ல கலந்துக்க பெண் ஊழியர்களை ஊக்கப்படுத்தி அனுப்பி வைக்கிறாங்க கார்ப்பரேட் கம்பெனிகள். நிதி நிர்வாகம், முதலீட்டு விஷயங்கள்ல ஆண்களோட பார்வை வேற மாதிரியும் பெண்களோட பார்வை வேற மாதிரியும் இருக்கு. ஆண்கள் எந்நேரமும் பணத்தைப் பத்தியும் முதலீட்டைப் பத்தியும் பேசிட்டிருக்காங்க. பெண்களோ அந்த விஷயத்துல ஆர்வம் காட்டறதில்லை. இத்தனைக்கும் ஆண்களைவிட பெண்களாகிய நாம் அதிக வருடங்கள் வாழறோம். அவங்களைவிட அதிகம் உழைக்கிறோம்.

உலகம் முழுக்க உள்ள வேலைகள்ல 67 சதவிகிதம் பெண்களால பார்க்கப்படுதுனு சொன்னா நம்புவீங்களா? ஆனா, அவங்கள்ல 1 சதவிகிதத்துக்கும் குறைவானவங்களே முதலீட்டு விஷயங்கள்ல ஆர்வமா இருக்காங்கன்றது வருத்தத்துக்குரிய விஷயம். காலையிலேருந்து சாயந்திரம் வரைக்கும், வாரத்துக்கு 40 மணி நேரம் உழைக்கிறாங்க பெண்கள். சம்பாதிக்கிறாங்க. வேலையிலேருந்து திடீர்னு ஒரு பிரேக் எடுக்கும் போதோ, ரிட்டயர் ஆகும் போதோ பார்த்தா அவங்களோட வாழ்க்கைத் தரம் எந்த வளர்ச்சியும் இல்லாத ஆரம்பிச்ச இடத்துலயே நின்னுக்கிட்டிருக்கு. இது சோகமில்லையா?’’ – பொட்டில் அறைகிறது ரேணுவின் பேச்சு.

இவர் தனது ஒரு நாள் ஒர்க்ஷாப்பில் கற்றுக் கொடுக்கும் முதல் பாடம் என்ன தெரியுமா? நிதி நிர்வாகமும் முதலீட்டுத் துறை ஆர்வமும் அப்படியொன்றும் ராக்கெட் சயின்ஸ் அல்ல என்பதே!

‘‘நிறைய படிச்சவங்களா, பெரிய பதவிகள்ல இருக்கிறவங்களா இருப்பாங்க. பணம், சேமிப்புனு வரும்போது தன் சார்பா அந்த விஷயங்களை வேற யாராவது பார்த்துப்பாங்கனு அலட்சியமா இருந்துடறாங்க. அப்படிப்பட்டவங்களை இந்த ஒர்க்ஷாப்ல சந்திச்சு, முதல் வேலையா அவங்களோட மனத்தடையை நீக்குவோம். 2 மணி நேர ஒர்க்ஷாப் அவங்களை நிதி நிர்வாகத்துல நிபுணர்களா மாத்திடும்னு சொல்ல வரலை. ஆனாலும் பணத்தைப் பத்தி, சேமிப்பைப் பத்தி, முதலீட்டைப் பத்தி அவங்களை யோசிக்க வைக்கும்…’’ – என்கிறவர் தான் சந்தித்த சில பெண்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘முதலீடு பத்தின துறையில ஆர்வமின்மைங்கிறது ஒரு காரணமா இருந்தாலும், பல பெண்களுக்கு குடும்பச் சூழலும் அதைப் பத்தி சிந்திக்க விடாம தடுக்குதுங்கிறது உண்மை. தன்பேர்ல இருந்த வீட்டையும் சொத்தையும் தன்னோட போலிக் கையெழுத்தைப் போட்டு அடமானம் வச்சு காசு பார்த்த கணவரைப் பத்தி சொல்லி அழுதாங்க ஒரு பெண். இன்னொரு பெண்ணோட கணவர் திடீர்னு இறந்துட்டார். அவர் இறந்த பிறகுதான் தன்னோட அத்தனை சொத்துகளையும் தனக்குத் தெரியாம உறவு வச்சிருந்த இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்த விஷயம் அவங்களுக்குத் தெரிய வந்திருக்கு. இப்படி நிறைய பெண்கள்… நிறைய நிறைய கதைகள்…

ஒர்க்ஷாப்புக்கு வர்றவங்களுக்கு ‘மணி பிஹேவியரல் அனாலிசிஸ்’னு ஒரு கிளாஸ் எடுப்போம். பணத்தைப் பத்தின ஒரு அறிமுகம் அது. அடுத்து அவங்க தன்னோட நிதிநிலைமை பத்தின மொத்த விவரங்களையும் எங்கக்கிட்ட பகிர்ந்துப்பாங்க. அதன் அடிப்படையில அவங்களோட வேலை, வயசு, ரிஸ்க் எடுக்கிற தன்மைனு எல்லாத்தையும் பொறுத்து அவங்களுக்கான பிரத்யேக முதலீட்டுத் திட்டத்தை டிசைன் பண்ணிக் கொடுப்போம். எங்களோட வேலை, எந்த வங்கி அல்லது கம்பெனியோட பொருட்களையோ, திட்டங்களையோ விற்கறது இல்லை. எங்களைத் தேடி வர்ற பெண்களோட பொருளாதாரப் பின்னணியையும் அவங்களோட தேவையையும் பார்த்து அவங்களுக்கேத்த முதலீட்டுத் திட்டங்கள் பத்தி எடுத்துச் சொல்வோம். அவங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கறது அவங்களோட உரிமை. முதலீட்டுல கையை காட்டி விடறதோட எங்க வேலை முடிஞ்சிடாது. 3 மாசத்துக்கொரு முறையோ, 6 மாசத்துக்கொரு முறையோ அவங்களை சந்திச்சு எல்லாம் சரியா போயிட்டிருக்கானு விசாரிப்போம்…’’ என்கிறவர், பெண்களுக்கு சில ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் முன் வைக்கிறார்.

‘‘குழந்தைங்களை, குறிப்பா பெண் குழந்தைங்களை பள்ளி நாட்கள்லேருந்தே முதலீட்டைப் பத்தி யோசிக்க வைக்கணும். வங்கிகளைப் பத்தியும், ஷேர் மார்க்கெட், ஈக்விட்டி மார்க்கெட் பத்தியும் அவங்களுக்கு அறிமுகப்படுத்தணும். அடுத்து காலேஜ் போனதும் பணத்தை எப்படிப் பத்திரமா பார்த்துக்கணும்னு சொல்லித் தரணும். வேலைக்குப் போனதும் பணத்தைக் கையாள்ற வித்தையைக் கத்துக் கொடுக்கணும்.

வாழ்க்கையில எப்போதும் எதுக்கும் தயாரா இருக்கணும். நீங்க எதிர்பார்க்காத நேரத்துல எப்படிப்பட்ட அசம்பாவிதமும் நடக்கலாம். அதை எதிர்கொள்ற மனநிலைக்குப் பழகணும். வேலைக்குப் போறவங்களோ, இல்லத் தரசியோ, பணத்தை நிர்வகிக்கிறதுங்கிறது வெறும் சேமிப்பு மட்டுமில்லை… சரியான வகையில
செய்யற முதலீடும்தான்னு தெரிஞ்சுக்கணும்.

உங்க வாழ்க்கையில எதிர்பாராத விதமா ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்குதா… உங்களுக்கு ரொம்பவும் நம்பகமான ஒருத்தர்கிட்ட ஆலோசனை கேட்டு, அதன்படி உங்க பொருளாதாரத்தைக் கையாளுங்க. ஆபத்தான நேரத்துல உங்களுக்கு உதவறதா சொல்லிட்டு வர்ற வேற யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க.
வங்கிகளோ, வேறு நிறுவனங்களோ விற்கற எந்தத் திட்டங்களையும் நம்பி வாங்காதீங்க. அதுக்காக அதெல்லாம் மோசமானவைனு அர்த்தமில்லை. ஆனா, உங்களுக்கேத்ததா இல்லாமப் போகலாம்.

சில ஆண்கள் தன் வீட்டுப் பெண்கள்கிட்ட தங்களோட நிதி நிலைமையை, சொத்து விவரங்களை, சேமிப்பை, வரவுகளை, கடன்களை – இப்படி எதையுமே பகிர்ந்துக்க விரும்ப மாட்டாங்க. அப்படிப்பட்ட ஆண்களை சமாளிக்கிறது மிகப்பெரிய சவால். அந்த மாதிரியான சூழல்ல இருக்கிற பெண்கள், பொருளாதாரத் தேவைக்கு ஆண்களை மட்டும் நம்பி இல்லாம, தன்னோட கால்ல நிற்கவும் பழகிக்கணும்.

பிறந்த வீட்டுச் சீதனமா வர்ற பணம், சேமிப்பு மாதிரியான சிலது சட்டப்படி அந்தப் பெண்ணுக்கே உரித்தானது. அதனால அந்தப் பணத்தை
யார்கிட்டயும் கொடுத்து ஏமாந்துடாம தக்க வச்சுக்கணும். நான் ஏன் முதலீடு செய்யணும்? எவ்வளவு முதலீடு செய்யணும்? எதுல முதலீடு செய்யணும்? எங்கே முதலீடு செய்யணும்? – இந்த நாலு கேள்விகளும் முதலீடு செய்யணும்னு முடிவெடுக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் தவிர்க்க முடியாதவை. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எந்த முதலீட்டுத் திட்டமுமே மோசமானதில்லை. தங்கமோ, ரியல் எஸ்டேட்டோ, மியூச்சுவல் ஃபண்டோ… எல்லாத்துக்கும் அதுக்கான சாதகங்கள் உண்டு. ஆனா, உங்க தேவையை எது பூர்த்தி செய்யும்னு தெரிஞ்சுக்கிட்டு அதுல முதலீடு செய்யறதுதான் புத்திசாலித்தனம்…’’ (ரேணுவை தொடர்பு கொள்ள admin@finscholarz.in)

‘‘எந்த முதலீட்டுத் திட்டமுமே மோசமானதில்லை. தங்கமோ, ரியல் எஸ்டேட்டோ, மியூச்சுவல் ஃபண்டோ… எல்லாத்துக்கும் அதுக்கான சாதகங்கள் உண்டு. ஆனா, உங்க தேவையை எது பூர்த்தி செய்யும்னு தெரிஞ்சுக்கிட்டு அதுல முதலீடு செய்யறதுதான் புத்திசாலித்தனம்!’’

‘‘உலகம் முழுக்க உள்ள வேலைகள்ல 67 சதவிகிதம் பெண்களால பார்க்கப்படுதுனு சொன்னா நம்புவீங்களா? ஆனா, அவங்கள்ல1 சதவிகிதத்துக்கும் குறைவானவங்களே முதலீட்டு விஷயங்கள்ல ஆர்வமா இருக்காங்க…’’